×

புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் உம்மன்சாண்டியின் மகனை கொல்ல சதி?.. கார் டயரின் நட்டுகள் கழற்றப்பட்டிருந்ததால் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனின் கார் டயரின் நட்டுகள் கழற்றப்பட்டிருந்தது. தக்க சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது சாண்டி உம்மனை கொல்ல நடந்த சதி என்று காங்கிரஸ் எம்எல்ஏ திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி உள்ளார். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அவரது தொகுதியான புதுப்பள்ளியில் அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் கோட்டயத்தில் ஒரு கல்லூரியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். இதில் காங்கிரஸ் எம்எல்ஏவான திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்த சாண்டி உம்மன் காரில் புறப்பட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனின் கார் டிரைவர் ஹரி கிருஷ்ணன், சாண்டி உம்மனின் காரின் பின்பக்க டயரில் இருந்த நட்டுகள் கழற்றப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அதற்குள் சாண்டி உம்மனின் கார் மெதுவாக அங்கிருந்து புறப்பட்டது. உடனடியாக ஹரிகிருஷ்ணன் ஓடிச் சென்று காரை நிறுத்துமாறு கூறினார். காரை நிறுத்தி அனைவரும் இறங்கிப் பார்த்த போது பின்பக்க டயரின் 5 நட்டுகளில் 4 நட்டுகள் கழற்றப்பட்டிருந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அனைத்து நட்டுகளையும் முறுக்கிய பின்னர் சாண்டி உம்மன் அந்தக் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.இது உம்மன் சண்டியின் மகன் சாண்டி உம்மனை கொல்ல நடந்த சதி என்றும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கூறினார்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் நீதிமன்றத்தில் சரண்
கல்லூரியை சூறையாடிய வழக்கு தொடர்பாக உம்மன் சாண்டியின் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஜெய்க் சி. தாமஸ் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து காலியான புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் சிபிஎம் சார்பில் டிஒய்எப்ஐ மத்தியக் கமிட்டி உறுப்பினரான ஜெய்க் சி.தாமஸ் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எப்ஐ) மாநில தலைவராக இருந்தார்.

அப்போது ஆலப்புழா மாவட்டம் காயங்குளத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இவரது தலைமையில் எஸ்எப்ஐ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அந்தக் கல்லூரி சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்க் சி.தாமஸ் உள்பட 100க்கும் மேற்பட்ட எஸ்எப்ஐ மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு காயங்குளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஜெய்க் சி.தாமஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து சமீபத்தில் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இவர் காயங்குளம் நீதிமன்றத்தில் ஆஜரானார். தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

The post புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் உம்மன்சாண்டியின் மகனை கொல்ல சதி?.. கார் டயரின் நட்டுகள் கழற்றப்பட்டிருந்ததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Umanchandi ,Pudupalli ,Thiruvananthapuram ,Oomman Chandy ,Kerala ,Pudupally ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...